நடுரோட்டில் ரவுடி வெட்டி கொலை
|ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடுரோட்டில் ரவுடி ஒருவரை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
மண்டியா:
ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடுரோட்டில் ரவுடி ஒருவரை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
ரவுடி கொலை
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பாலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 32). நேற்று மதியம் இவர் வெளியே சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ஸ்ரீரங்கப்பட்டணா சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்புறம் வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் வினோத் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து காரில் இருந்து 4 பேர் கும்பல் ஆயுதங்களுடன் இறங்கி, வினோத்தை நோக்கி வந்தனர். இதை பார்த்த வினோத் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்தகும்பல் விடவில்லை. வினோத்தை துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
4 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. ஆனால் நெருங்கிய நண்பர்களா? அல்லது தொழில் போட்டியா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான 4 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.