< Back
தேசிய செய்திகள்
காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் தொடர் போராட்டம்
தேசிய செய்திகள்

காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் தொடர் போராட்டம்

தினத்தந்தி
|
18 Sept 2023 2:48 AM IST

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டியா:

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

கர்நாகடத்தில் இருந்து தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரையை கண்டித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், அரசியல் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மண்டியாவில் கடந்த 15 நாட்களாக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் விவசாய சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி மாநில அரசுக்கு விடுத்துள்ள பரிந்துரையை கைவிடவேண்டும். மேலும் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் சரியாக வாதாடி கர்நாடகத்திற்கான உரிமையை மீட்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.

வினாடிக்கு 4,729 கன அடி நீர்...

இதற்கிடையில் 2-வது நாளான நேற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.அதே நேரம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரிஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் (கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்து நேற்று வழக்கம் போல பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதன்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 3,172 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 4,729 கன அடி நீர் திறந்துவிடுப்பட்டு வருகிறது. மைசூருவில் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் இருந்து நீர்பாசனத்திற்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்