கார்களில் கட்டாயம் 6 காற்றுப்பைகள் அமைக்கும் நடைமுறை - மத்திய அரசு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு
|பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை மத்திய அரசு ஓராண்டுக்கு தள்ளிவைத்துள்ளது.
புதுடெல்லி,
கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 'ஏர்பேக்' எனப்படும் காற்றுப்பை பயன்படுத்தப்படுகிறது. கார்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் போது, இந்த காற்றுப்பை விரிவடைந்து ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்படாமல் பாதுகாக்கும். மற்றபடி காரில் உள்ள மற்ற பயணிகளுக்கு சீட்-பெல்ட் மட்டுமே பாதுகாப்பு உபகரணமாக அமைந்திருக்கும்.
இந்த நிலையில் காரில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அனைத்து கார்களில் கட்டாயம் 6 காற்றுப்பைகள் அமைக்க வேண்டும் என்பதை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் உலகளாவிய விநியோக சங்கிலி கட்டுப்பாட்டின் காரணமாக ஆட்டோமொபைல் தொழில்துறை சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை மத்திய அரசு ஓராண்டுக்கு தள்ளிவைத்துள்ளது.
இதன்படி கார்களில் கட்டாயம் 6 காற்றுப்பைகள் அமைக்கும் நடைமுறை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.