நாளை மறுநாள் மண்டல பூஜை; சபரிமலைக்கு படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்
|நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெற உள்ளதால் தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர்.
ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற நிலையிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு ஆதார் கார்டு மூலம் உடனடி பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் ஒரு மண்டல காலத்திற்கு விரதம் இருந்து கோவிலுக்கு வருகை தருகின்றனர். நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெற உள்ளதால் தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.