
சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர்.
இந்த நிலையில் நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி, பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து சபரிமலைக்கு கடந்த 23-ந்தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடைந்தது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெற்றது.
தங்க அங்கியில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.