மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு
|வரும் 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை,
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு (2023) மண்டல-மகரவிளக்கு சீசன் முதல் அடுத்த ஆண்டு (2024) மண்டல சீசன் வரை நடை திறப்பு குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் கால அட்டவணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15-ந்தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20-ந்தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
அதைத்தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 14-ந்தேதி அதிகாலை முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு மார்ச் 13-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 25-ந்தேதி பம்பையில் நடைபெறும் ஆராட்டுடன் விழா நிறைவு பெறும். இதுபோல் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மேலும் அடுத்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அடுத்த மண்டல-மகரவிளக்கு சீசன் ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.