முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்: இரவில் வாட்ச்மேன்; பகலில் படிப்பு - இளைஞருக்கு ஒரே நேரத்தில் கிடைத்த 2 அரசு வேலை
|தெலுங்கானாவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்கு படித்து கொண்டிருந்த இளைஞர் தற்போது 2 அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
ஐதராபாத்,
அரசு வேலை என்ற கனவு, லட்சியம் இல்லாத இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, சமூகத்தில் உயரிய மதிப்பு என அரசு வேலையில் பல நன்மைகள் இருப்பதால் இளைஞர்கள் பலரும் போட்டிப்போட்டுக்கொண்டு அரசு வேலைக்காக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் அரசு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் நாட்டில் அரசு வேலை கிடைப்பது எல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 8 ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு கூட முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அவ்வளவு கடினமானது இந்த அரசு வேலை. போட்டியில் அரசு வேலை கிடைத்துவிட்டால் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு நிகரான சாதனையாக இளைஞர்களால் பார்க்கப்படுகிறது.
நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பதே முக்கியம். ஒருவன் முயற்சியும் பயிற்சியும் எடுத்தால் எளிதாக வெற்றிக்கனியை பறித்து விடலாம். தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக தெலுங்கானாவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே படித்த இளைஞர், இரண்டு அரசு வேலையை போட்டித்தேர்வுகளில் வென்று அரசு வேலையை வாங்கி உள்ளார்.
தெலுங்கானாவின் மான்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோலே பிரவீன் குமார். 31 வயதான இவரது தந்தை மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். தாயார் பீடி சுற்றும் வேலை செய்து வருகிறார். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் பிரவீன் குமாரை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தனர். எம்.காம், பி.எட், மற்றும் எம்.எட் ஆகிய படிப்புகளை முடித்து இருந்த பிரவீன் குமாருக்கு எந்த வேலையுமே கிடைக்கவில்லை.
அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டு இருந்த பிரவின் குமார் வேலையில்லாமால் அரசு வேலைக்கு படிப்பது கடினம் என நினைத்தார். அப்போதுதான் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு நேர வாட்ச்மேன் பணிக்கு ஆள் எடுக்கப்படுவதை அறிந்தார். இந்த வேலைக்கு விண்ணப்பித்த பிரவீன் குமாருக்கு வேலையும் கிடைத்தது. இரவில் வாட்ச் மேன் வேலை பார்த்துக் கொண்டே பகலில் போட்டித்தேர்வுகளுக்கு படித்து வந்தார்.
தனது விடா முயற்சியின் பயனாக தற்போது அவர் இரண்டு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளாராம். முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை பேராசிரியர் என இரண்டு பணிகளுக்கு நடந்த போட்டித்தேர்வில் இரண்டிலுமே வெற்றி பெற்று தற்போது தேர்வாகியுள்ளார். வாட்ச்மேன் வேலையில் மாதம் ரூ. 9 ஆயிரம் மட்டுமே பிரவீன்குமாருக்கு கிடைத்தது.
தற்போது ரூ. 73 ஆயிரம் முதல் ரூ. 83 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்க போகிறது அவருக்கு. இளநிலை விரிவுரையாளர் பணியை தேர்வு செய்ய பிரவீன் குமார் முடிவு செய்துள்ளாராம். இது குறித்து பிரவீன் குமார் கூறுகையில், "வாட்ச்மேனாக பணி செய்யும் போது நான் ஒருபோதும் வேலை பார்ப்பதாக நினைக்கவில்லை. எனக்கு படிக்க நேரம் கிடைத்து இருப்பதாகவே எண்ணி படித்தேன்" என்று கூறினார். அரசு தேர்வுக்காக படித்து வரும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.