நடிகை ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ; டீப் பேக் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டவர் கைது
|டீப் பேக் டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த நவம்பர் மாதம் பரவியது.
புதுடெல்லி,
செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக சமீபகாலமாக டிஜிட்டல் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் முகத்தை வைத்து கற்பனையில் பல ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின்றனர்.
சமீபத்தில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலுக்கு தமன்னா ஆடிய ஒரு ரீல்ஸ் வீடியோவில் சிம்ரனின் முகத்தை வைத்து 'டீப் பேக்' என்ற ஏஐ தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகியது. அதேபோல பல்வேறு தமிழ்ப் பாடல்கள் பிரதமர் மோடியின் குரலில் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தன.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 'டீப் பேக்' மூலம் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராஷ்மிகா மந்தனாவும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி டீப் பேக் தொழில்நுட்பம் பயன்படுத்தி பல பிரபலங்கள் முகத்துடன் போலியாக வீடியோக்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேம் ஒன்றை விளம்பரப்படுத்துவது போல வீடியோ வெளியாகியது. இந்த வீடியோவை பகிர்ந்த சச்சின், இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.
டீப் பேக் வீடியோவை பயன்படுத்தி தவறாக வீடியோ வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. எனினும், இத்தகைய வீடியோக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனிடையே, ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.