குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் விடுதலை
|பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பெங்களூரு
பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் துளசி(வயது 46). இவர், கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் துளசி அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கிழக்கு மண்டல போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபிரசாத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து அவர் விசாரணை கைதியாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துளசி கொலை வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி கோா்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது துளசியிடம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிவபிரசாத் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அந்த பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறி இருந்தது.
விடுதலை செய்து தீர்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து கா்நாடக ஐகோர்ட்டில் சிவபிரசாத் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் வீரப்பா, ராஜய்யா தலைமையிலான அமா்வு முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். அப்போது துளசியை கொலை செய்த வழக்கில் சிவபிரசாத் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை. இருப்பினும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை வழக்கில் சாட்சிகள் இல்லாததால் சிவபிரசாத் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்கில் மட்டும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது முரண்பாடாக உள்ளது. எனவே சாட்சிகள் இல்லாததால் சிவபிரசாத் விடுதலை செய்யப்படுகிறார் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மேலும் சிவபிரசாத்தை விடுதலை செய்யும்படி பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பெண் கொலை வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்படாமல் இருந்தும் சிவபிரசாத் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.