காதலியை கொன்று, உடலை வீட்டில் தொட்டியில் மறைத்து வைத்த நபர் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
|உத்தரபிரதேசத்தில் காதலியை கொன்று, அவரது உடலை வீட்டில் தொட்டியில் காதலன் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேசம் மாநிலத்தில் காதலியை கொன்று, அவரது உடலை புதிதாக கட்டப்பட்டு வரும் தன்னுடைய வீட்டின் தொட்டியில் காதலன் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 30-ந்தேதி அன்று ராஜ் கேசர் (வயது 35) என்ற பெண் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து அவரது தொலைபேசி அழைப்பு விவரத்தின் அடிப்படையில், அரவிந்த் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதன்படி பதினைந்து நாட்களுக்கு முன்பு அரவிந்த், கேசரை கொலை செய்து அவரது உடலை தனது வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து யமுனாபர் கர்ச்சனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஹேவா பகுதியில் உள்ள அரவிந்தின் வீட்டில் இருந்து கேசரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.