< Back
தேசிய செய்திகள்
ஓடும் ரெயிலில் தமிழக மாடல் அழகியிடம் சில்மிஷம்... வாலிபர் கைது
தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் தமிழக மாடல் அழகியிடம் சில்மிஷம்... வாலிபர் கைது

தினத்தந்தி
|
19 April 2024 4:23 PM IST

பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கோட்டயம் ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றுள்ளார்.

கோட்டயம்:

தமிழகத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ரெயிலில் சென்றுள்ளார். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், மாடல் அழகியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயத்துடனேயே பயணம் செய்த அந்த பெண், திருவனந்தபுரத்திற்கு சென்று இறங்கியதும் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். கடந்த 10-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கு கோட்டயம் ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், மாடல் அழகியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது, கொல்லத்தைச் சேர்ந்த அன்சர் கான் (வயது 25) என்பதும், அவர் ஏற்கனவே வேறு சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் செல்போன் கோபுர எல்லைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்சர் கானின் இருப்பிடத்தை கண்டுபிடித்து நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக ரெயில்வே காவல்துறை கூறியிருப்பதாவது:-

பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கோட்டயம் ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சந்தேக நபர்களின் முகம் பதிவாகி உள்ள சி.சி.டி.வி. காட்சிகள், மாநிலம் முழுவதும் உள்ள ரெயில்வே காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்ததை பார்த்து ஆய்வு செய்தோம். இதில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டார். அத்துடன் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் உள்ளூரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில மானபங்க வழக்குகள் உள்ளன.

இவ்வாறு ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்