ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டவர் மும்பை விமான நிலையத்தில் கைது
|அந்த நபரின் வயிற்றில் இருந்து 74 கொக்கென் கேப்சூல்களை மருத்துவர்கள் உதவியுடன் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.
மும்பை,
ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த சியரா லியோன் நாட்டை சேர்ந்த ஒருவர் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சியரா லியோன் நாட்டில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மும்பை வந்த அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே அவர் வயிற்றில் விழுங்கி போதைப்பொருளை கடத்தி வந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் கோர்ட்டு அனுமதியுடன் அந்த பயணியிடம் மருத்துவ சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த நபரின் வயிற்றில் கேப்சூல் வடிவில் கொக்கென் என்ற போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரின் வயிற்றில் இருந்து 74 கொக்கென் கேப்சூல்களை மருத்துவர்கள் உதவியுடன் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.11 கோடி என வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.
போதைப்பொருள் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அந்த நபர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதற்காக கொக்கென் கேப்சூல்களை உட்கொண்டதாக கூறினார்.
இதற்கு முன்னதாக கடந்த மாதம் 24ம் தேதி ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.9.79 கோடி மதிப்பிலான 1,979 கிராம் கொக்கென் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.