அமெரிக்காவுக்குள் குடும்பத்துடன் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குஜராத் நபர் 'டிரம்ப்' சுவரில் இருந்து கீழே விழுந்து பலி - 2 பேர் கைது
|குஜராத்தை சேர்ந்த நபர் தனது மனைவி, குழந்தையுடன் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தார்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டல் கலோல் பகுதியில் வசித்து வந்தவர் பிரிஜிகுமார். அவருக்கு பூஜா என்ற மனைவியும் தன்மென் என்ற மகனும் உள்ளனர்.
இதனிடையே, பிரிஜிகுமார் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்துள்ளார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு செய்யும் தரகர் கும்பலை அனுகியுள்ளார்.
அந்த தரகர் கும்பல் கொடுத்த ஆலோசனை படி கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜிகுமார் தனது மனைவி பூஜா, மகன் தன்மென் ஆகியோருடன் மும்பையில் இருந்து துருக்கி சென்றார். துருக்கியில் இருந்து பின்னர் மெக்சிகோ சென்றார்.
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் செல்ல முயற்சித்துள்ளனர். மெக்சிகோ-அமெரிக்கா எல்லையில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பால் மிகப்பெரிய சுவர் எழுப்பட்டது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவே இந்த அமைக்கப்பட்டது.
டிரம்ப் சுவர் என்று அழைக்கப்பட்ட இந்த சுவரை தாண்ட நினைத்த பிரிஜிகுமார் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த சுவற்றின் மீது ஏறியுள்ளார். அப்போது, சுவற்றின் உச்சியில் இருந்து 3 பேரும் கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பிரிஜிகுமார் உயிரிழந்தார். அவரது மனைவி பூஜா மகன் தன்மென் படுகாயமடைந்தனர். பூஜா அமெரிக்காவுக்குள்ளும் அவரது மகன் தன்மென் மெக்சிகோவுக்குள்ளும் விழுந்தனர்.
இந்த சம்பவம் அறிந்த மீட்புக்குழுவினர் பூஜா, தன்மென்னை படுகாயங்களுடன் மீட்டனர். அதேவேளை, உயிரிழந்த பிரிஜிகுமாரின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பிரிஜிகுமாரிடமிருந்து பணம் பறிக்க அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றியதாக 7 பேர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அகமதாபாத், காந்திநகரை சேர்ந்த 2 கடத்தல்காரர்களை குஜராத் போலீசார் இன்று கைது செய்தனர்.