< Back
தேசிய செய்திகள்
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட மனநோயாளி.. ஆபரேசன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி
தேசிய செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட மனநோயாளி.. ஆபரேசன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி

தினத்தந்தி
|
29 Sep 2023 11:16 AM GMT

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்து பல்வேறு உலோகப் பொருட்கள் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், பல மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல், வயிற்று வலியுடன் குமட்டலும் இருந்துள்ளது. அவரால் தூங்கவும் முடியவில்லை.

இதனையடுத்து, மெடிசிட்டி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது வயிற்று பகுதியை எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்து பார்த்தனர். ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் பல உலோகப் பொருட்கள் இருப்பது தெரிந்தது.

அவற்றை நீக்க உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவரது வயிற்றில் ஏராளமான உலோகப் பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெளியில் எடுத்தனர். அவற்றைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த உலோகப் பொருட்களில் இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், க்ளிப், ஊக்கு என பல பொருட்கள் அடங்கும்.

இதுபற்றி அந்த நோயாளியின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, அந்த நோயாளி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இத்தனை பொருட்களையும் அவர் எப்படி விழுங்கினார் என்பது அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை.

வயிற்றுக்குள் இருந்த உலோகப் பொருட்களை ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக வெளியில் எடுத்தாலும், அந்த பொருட்கள் நீண்ட காலமாக வயிற்றில் தங்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடல்நிலை சீரடையவில்லை. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்