< Back
தேசிய செய்திகள்
காதலிகள் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தேசிய செய்திகள்

காதலிகள் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தினத்தந்தி
|
8 Oct 2023 3:47 AM IST

2 காதலிகளின் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:

2 காதலிகளின் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

4 ஆண்டு காதல்

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு, அதே நிறுவனத்தில் வேலை செய்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் சந்தோசுக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதுகுறித்து அறிந்த முதல் காதலி, சந்தோசை, நிறுவனத்தில் வைத்து கடுமையாக திட்டி உள்ளார். இதுபற்றி அறிந்ததும் சந்தோசின் பெற்றோர், முதல் காதலியின் பெற்றோரை அழைத்து பேசி உள்ளனர்.

தற்கொலை

பின்னர் முதல் காதலிக்கும், சந்தோசுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு மத்தியில் முதல் காதலி நிறுவனத்தின் வேறு கிளைக்கு மாற்றப்பட்டார். இந்த பணியிட மாற்றத்திற்கு சந்தோஷ் தான் காரணம் என கூறி அவருடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் முதல் காதலியுடன் திருமணம் குறித்து அறிந்த 2-வது காதலி, சந்தோசுடன் தகராறு செய்துள்ளார். இருவரும் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும் அவருக்கு தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர். 2 காதலிகளின் தொல்லை தாங்க முடியாமல் சந்தோஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அவர் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகன் சாவுக்கு 2 காதலிகள் தான் காரணம் என அவரது பெற்றோர் ராமமூர்த்திநகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்