< Back
தேசிய செய்திகள்
கர்ப்பிணியை மிதித்ததில் வயிற்றிலேயே 5 மாத சிசு உயிரிழந்த பரிதாபம்
தேசிய செய்திகள்

கர்ப்பிணியை மிதித்ததில் வயிற்றிலேயே 5 மாத சிசு உயிரிழந்த பரிதாபம்

தினத்தந்தி
|
21 Sept 2023 3:46 AM IST

மோதலை விலக்கிவிட முயன்றபோது கர்ப்பிணியை காலால் மிதித்ததில் வயிற்றில் இருந்த 5 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்தது.

துமகூரு:

மோதலை விலக்கிவிட முயன்றபோது கர்ப்பிணியை காலால் மிதித்ததில் வயிற்றில் இருந்த 5 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்தது.

நிலப்பிரச்சினை

துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா சி.எஸ்.புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஹர்ஷிதா. இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். குமாருக்கும், அவரது சகோதரர் ஹரிஷ் கங்கன்னா குடும்பத்துக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும், குமார் மற்றும் ஹரிஷ் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அவர்கள் 2 பேரும் சாலையில் நின்றபடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கணவர் சண்டை போடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹர்ஷிதா, சண்டையை விலக்கிவிட சென்றார். அப்போது தனது கணவரை பிடித்து இழுத்தார். அந்த சமயத்தில் கர்ப்பிணி ஹர்ஷிதாவின் வயிற்றில் தவறுதலாக அங்கிருந்தவர்கள் உதைத்ததாக தெரிகிறது.

சிசு உயிரிழந்தது

இதனால் வலி தாங்க முடியாமல் ஹர்ஷிதா அலறி துடித்தார். மேலும் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது வயிற்றில் மிதித்ததில் 5 மாத சிசு இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இதைக்கேட்டு குமார் கண்ணீர்விட்டு கதறி அழுதார். ஹர்ஷிதாவும் கதறி அழுதார்.

இதுபற்றி அறிந்த சி.எஸ்.புரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலப்பிரச்சினையின்போது மோதல் ஏற்பட்டதும், மோதலை விலக்கிவிட சென்ற கர்ப்பிணி வயிற்றில் மிதித்ததால், அவரது 5 மாத சிசு வயிற்றிலேயே இறந்ததும் தெரிந்தது.

குற்றச்சாட்டு

இதற்கிடையே போலீசார், கர்ப்பிணி மீதான தாக்குதல் குறித்து மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது தொடர்பாக அவர்கள் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என குமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்