ஏர் இந்தியா விமானத்தில் புகைபிடித்த நபர் கைது
|ஏர் இந்தியா விமான பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ராஜஸ்தானை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
ஜெய்ப்பூரில் இருந்து கடந்த 25ம் தேதி புறப்பட்டு மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ 15.670 இல் ராஜஸ்தானை சேர்ந்த அர்ஜுன் தாலோர் (வயது 34) என்ற பயணி பயணித்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரம் கழித்து அர்ஜுன் கழிவறைக்கு சென்று புகைபிடித்துள்ளார். இதனால் விமானத்தில் இருந்த சென்சார் செயலிழந்தது. இதையடுத்து விமான குழு ஊழியர்களில் ஒருவர் உடனடியாக கழிவறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் வெளியில் இருந்து கதவை விமான குழு ஊழியர் திறந்த போது அர்ஜுன் புகைபிடிப்பதை கண்டார்.
விமான குழு ஊழியரை பார்த்ததும் அர்ஜுன் உடனடியாக கழிவறையிலிருந்து வெளியே வந்து தனது இருக்கைக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து விமானம் மும்பையில் தரையிறங்கியது, அப்போது விமான குழுவினர் அர்ஜுனை ஏர் இந்தியா பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஏர் இந்தியா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை சஹார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் மீது விமானத்தில் புகைபிடித்தது தொடர்பாக புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.