திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்
|ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நபர் தனது காதலியை கொலை செய்து பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
புதுடெல்லி,
டெல்லி துவாரகா அருகே உள்ள தாப்ரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ருக்சர் ராஜ்புத் (வயது 26) என்ற பெண், விபல் டெய்லர் என்பவருடன் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு ருக்சர் கொலை செய்யப்பட்டு பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காதலன் விபல் தனது மகளை கொன்றுவிட்டதாக ருக்சரின் தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, விபல் டெய்லரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு ராஜஸ்தானில் பதுங்கியிருந்த விபல் டெய்லரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், சொந்த வீடு வாங்குவதற்காக தனக்கு ரூ.7 லட்சத்தை ருக்சர் பணம் கொடுத்ததாகவும், அதன்பிறகு கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாலும், திருமணத்துக்கு நச்சரித்ததாலும் கொன்று விட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.