சண்டையை தடுக்க முயன்ற இளைஞர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை
|டெல்லியில் சண்டையை தடுக்க முயன்ற இளைஞர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
வடமேற்கு டெல்லியில் உள்ள பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (21 வயது). இவர் தனது மனைவி, ஒரு வயது மகன், தம்பி மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். குமார் சதார் பஜாரில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவரது தம்பி மற்றும் தங்கை இருவரும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது தம்பி குணால் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். அப்போது குணாலுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதையடுத்து குணால் தனது அண்ணன் குமாருக்கு போன் செய்து அவரை அழைத்துள்ளார். மைதானத்திற்கு வந்த குமார் சண்டையை நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது சிலர் குமாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.