< Back
தேசிய செய்திகள்
கவர்னர் தன் நண்பர்களை துணைவேந்தராக நியமிக்கிறார்- மம்தா பானர்ஜி
தேசிய செய்திகள்

கவர்னர் தன் நண்பர்களை துணைவேந்தராக நியமிக்கிறார்- மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
29 Aug 2023 10:09 PM IST

கவர்னர் தன் நண்பர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

அரசியல் சட்ட மீறல்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர், மாநில கவர்னர் சி.வி.ஆனந்தபோசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

நம் மீது தற்போது இன்னொரு கண்ணும் விழுந்துள்ளது. கவர்னர் பதவியை நான் மதிக்கிறேன். ஆனால், கவர்னர், அரசியல் சட்டத்தை மீறி நடந்து கொள்கிறார்.

துணைவேந்தர் பதவி

கவர்னர் என்பதால், அவர் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார். பல்கலைக்கழகங்களின் நிலைமையை பாருங்கள். தன் நண்பர்களை அவர் துணைவேந்தர்களாக நியமித்துக் கொள்கிறார். உதாரணமாக, பேராசிரியர் அனுபவமே இல்லாத ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியை துணைவேந்தராக நியமித்துள்ளார்.

பா.ஜனதா அணி ஒன்றின் தலைவர், ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்படி அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் மீது பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும். கவர்னர் பதவி என்பது முதல்-மந்திரி பதவி போன்றது அல்ல. கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். முதல்-மந்திரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறைத்து மதிப்பிட யாரும் முயற்சிக்கக்கூடாது. மதவாத தீயை தூண்டிவிடக்கூடாது.

பழிவாங்கும் அரசு

மாணவர்களை அழைத்து ஊழல் பற்றி கேட்கிறார்கள். முதலில் இதற்கு பதில் சொல்லட்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஊழலில் ஈடுபட்டது யார்? வங்கிகளை மூடியது, சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பேரங்கள், கொேரானா தடுப்பூசியில் ஊழல் போன்ற ஊழல்களில் ஈடுபட்டவர்கள் யார்?

இதுபோன்ற பழிவாங்கும் அரசை நான் பார்த்தது இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, என் அண்ணன் மகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜியை கைது செய்யப்போவதாக செய்தி கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்