< Back
தேசிய செய்திகள்
யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்.. சந்தேஷ்காளி சம்பவம் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேச்சு
தேசிய செய்திகள்

யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்.. சந்தேஷ்காளி சம்பவம் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேச்சு

தினத்தந்தி
|
15 Feb 2024 4:02 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு எதிராக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஷாஜகான் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

இந்த விவகாரம் மேற்கு வங்காள மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சட்டமன்றத்திலும் பிரச்சினை எழுப்பியது. பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜும்தார் தலைமையில் பாசிர்ஹாட்டில் உள்ள எஸ்.பி. அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

சந்தேஷ்காளி கிராமத்தில் உள்ள நிலவரத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்.

பெண்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக மாநில மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறை என இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாருக்கும் நான் அநீதி இழைக்க அனுமதித்ததில்லை, இனியும் அனுமதிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்