ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் மம்தா பானர்ஜி சந்திப்பு 3-வது அணி அமைக்க ஆலோசனையா?
|ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை மம்தா பானர்ஜி சந்தித்தார். 3-வது அணி அமைப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
புவனேஸ்வர்,
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 21-ந் தேதி ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள புரியில் தங்கி இருந்தபோது, ஜெகநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.
வங்காள பவன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று மேற்கு வங்காளத்துக்கு திரும்பும் முன்பு, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.
நவீன் பட்நாயக்குக்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ சால்வையை வழங்கினார்.
மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார். 3 ரதங்களின் மாதிரி வடிவத்தையும், ஒடிசாவின் பிரபலமான இனிப்பு வகையையும் அளித்தார்.
இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நவீன் பட்நாயக் கூறியதாவது:-
இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன்.
3-வது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜெகநாதர் ஆலயத்துக்கு வருமாறு அவரை அழைத்தேன். புரியில் வங்காள பவன் கட்ட 2 ஏக்கர் நிலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.