காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி: அகிலேஷ் யாதவ்-மம்தா பானர்ஜி முடிவு
|காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை அமைக்க சமாஜ்வாடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
கொல்கத்தா,
மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என பல தலைவர்கள் குரல் கொடுத்தாலும், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க சமாஜ்வாடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
கொல்கத்தாவில் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இந்த கூட்டணி தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மம்தா பானர்ஜி வருகிற மார்ச் 23-ந்தேதி ஒடிசா முதல்-மந்திரியும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார். எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற நாட்களில் மற்ற மாநில கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சமமான தூரத்தில் வைக்க வேண்டும் என்றே இந்த தலைவர்கள் விரும்புகின்றனர். மம்தா பானர்ஜியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
"தற்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் சமமான தூரத்தை பராமரிக்க விரும்புகிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு. பாஜகவின் தடுப்பூசியைப் பெறுபவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றால் கவலைப்படுவதில்லை. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு எதிரான வழக்குகள் மத்திய புலனாய்வு அமைப்புகளால் கைவிடப்பட்டுள்ளன" என்று கூறினார்.