ஜி-20 விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை - ப.சிதம்பரம் கண்டனம்
|ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, ஜனாதிபதி அளிக்கும் விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாததற்கு ப.சிதம்பரம் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து முதல்-மந்திரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அளிக்கும் விருந்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை வேறு எந்த ஜனநாயக நாட்டின் அரசாங்கமும் அழைக்காததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா, அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.