இஸ்ரேல் போரில் கேரள பெண் படுகாயம்
|இஸ்ரேலில் நடைபெற்று வரும் போரில் கேரள பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
டெல்அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போரை அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்றும் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில், ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் பகுதியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஷீஜா ஆனந்த்(வயது 41) என்ற பெண் இஸ்ரேலில் கடந்த 7 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் பகுதியில் இவர் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று தனது கணவருடன் தொலைபேசியில் பாதுகாப்பாக இருப்பதாக ஷீஜா பேசிக் கொண்டு இருக்கும்போதே பயங்கர சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் ஷீஜாவின் கணவரை அழைத்த சக கேரள செவிலியர் ஒருவர், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் ஷீஜா படுகாயமடைந்துள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு அறுவை சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு ஷீஜா மாற்றப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஷீஜாவின் குடும்பத்தினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மாநில அரசை நாடியுள்ளனர்.
ஷீஜாவின் கணவர் புனேவில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இஸ்ரேலில் சிக்கியுள்ள 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.