திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால்
|உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொச்சி,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் ஐந்து நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையின்படி, மோகன்லாலுக்கு வைரஸ் சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
லூசிபர் படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் மோகன்லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.