< Back
தேசிய செய்திகள்
சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை - மகரஜோதியை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு
தேசிய செய்திகள்

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை - மகரஜோதியை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு

தினத்தந்தி
|
13 Jan 2023 9:32 AM GMT

மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக தற்போது சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் 14-ந்தேதி(நாளை) மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.

அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று வலியகோய்க்கல் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பம்பையில் உள்ள கணபதி கோவிலுக்கு நாளை இந்த ஆபரண பெட்டி வந்தடையும். அங்கு ஆபரண பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தலைச்சுமையாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

சரங்கொத்தி பகுதியில் தேவசம்போர்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்போடு தங்க ஆபரண பெட்டியை சபரிமலைக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் ஆபரண பெட்டி 18-ம் படியேறி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அதே சமயம் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி ஜோதியாக காட்சியளிப்பார்.

இந்த மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக தற்போது சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். சபரிமலையில் ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், உடனடி பதிவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கானக பாதையான பெரும்பாதை வழியாக திரளான பக்தர்கள் தொடர்ந்து சரிமலைக்கு வருகை தருகின்றனர்.

இதனிடையே பம்பையில் பக்தர்களை நிறுத்தி அவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபரிமலையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை மகரஜோதியை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்