நாளை மகரவிளக்கு பூஜை... உச்சகட்ட பாதுகாப்பில் சபரிமலை ஐயப்பன் கோவில்
|சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை,
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகர விளக்கு தரிசன நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாய் காட்சி அளிப்பார்.
அப்போது பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கும். மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.
நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள். இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால் நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானம், பொன்னம்பலமேடு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.