< Back
தேசிய செய்திகள்
பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கு; என்னை சிக்க வைத்து விட்டனர்:  பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி
தேசிய செய்திகள்

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கு; என்னை சிக்க வைத்து விட்டனர்: பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி

தினத்தந்தி
|
31 Aug 2022 2:42 PM IST

ஜார்க்கண்டில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிக்கு செப்டம்பர் 11-ந்தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.



ராஞ்சி,



வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பா.ஜ.க. பெண் தலைவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ரா என்பவரின் மனைவி. பா.ஜ.க. மகளிரணியின் தேசிய செயல் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். பழங்குடியின பெண்ணான சுனிதா (வயது 29) என்பவர் இவரது வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சீமா மீது சுனிதா போலீசில் அதிரடியான புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதனடிப்படையில், ராஞ்சி நகரின் அர்கோரா போலீசார் பத்ராவை தேடி வந்தனர். போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்பி செல்ல முயன்ற சீமாவை போலீசார் இன்று காலையில் கைது செய்தனர்.

சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் நடந்து உள்ளன. அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிவறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

அவருக்கு உணவோ அல்லது தண்ணீரோ தராமல் பல நாட்களாக துன்புறுத்தப்பட்டு உள்ளார். இரும்பு தடிகளை கொண்டு பத்ரா அவரை அடித்து உள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. வேலை செய்யும்போது தவறு ஏற்பட்டு விட்டால், அவர் என்னை அடிப்பார் என்று சுனிதா கூறியுள்ளார்.

சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164ன் கீழ் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளரை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்துள்ளது.

இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக சீமா பத்ராவை போலீசார் கொண்டு செல்லும்போது, அவர் பத்திரிகையாளர்களை நோக்கி, இவை பொய்யான குற்றச்சாட்டுகள். அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள். நான் சிக்க வைக்கப்பட்டு உள்ளேன் என கூறினார்.

இந்த வழக்கில், சீமா பத்ராவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அவரை வருகிற செப்டம்பர் 11-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.

மேலும் செய்திகள்