நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்..? மஹுவா மொய்த்ராவின் அவதூறு வழக்கில் இருந்து வழக்கறிஞர் விலகல்
|திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அவரது வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் விலகினார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு துபே கடிதம் எழுதியிருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புகார் மீது, மக்களவை நெறிமுறைக்குழு வரும் 26-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மஹுவா மொய்த்ரா மறுத்துள்ளார். அத்துடன், நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேகத்ராய், சில ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மஹுவா மொய்த்ராவியின் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வழக்கில் இருந்து விலகுவதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனுக்கு கருத்து மோதல் இருப்பதாக இன்றைய விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேகத்ராய் தெரிவித்தார்.
மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக கூறி, அதற்கான ஆதாரத்தை பாஜக தலைவர் நிஷிகாந்த் துபேயிடம் வழக்கறிஞர் தேகத்ராய் ஒப்படைத்துள்ளார்.
மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியும் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், மஹுவா மொய்த்ரா பிரபலம் அடைவதற்காக அதானி குழுமத்தை தாக்கி பேசியதை பார்த்ததாக கூறியிருக்கிறார். மேலும், நாடாளுமன்ற இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தன்னுடன் பகிர்ந்து கொண்டதாகவும் தர்ஷன் ஹிராநந்தனி கூறியுள்ளார்.
தர்ஷன் ஹிராநந்தனியின் வாக்குமூலத்தை கடுமையாக சாடிய மஹுவா மொய்த்ரா, அந்த வாக்குமூலத்தில் கையொப்பமிடுமாறு அவருக்கு பிரதமர் அலுவலகம் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.