< Back
தேசிய செய்திகள்
அரசு பங்களாவை காலி செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா
தேசிய செய்திகள்

அரசு பங்களாவை காலி செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா

தினத்தந்தி
|
19 Jan 2024 9:12 AM GMT

மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில், இதற்கு விளக்கம் கேட்டு அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது. பங்களாவை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹுவா மொய்த்ரா, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார். இன்று காலை 10 மணிக்கு முழுமையாக காலி செய்யப்பட்டுவிட்டதாக எஸ்டேட் இயக்குநரகத்திடம் மஹுவா மொய்த்ரா சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்