வரும் தேர்தல்களில் மக்களின் மனநிலை காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது - சோனியா காந்தி
|மக்களின் மனநிலை நமக்கு சாதகமாக உள்ளது, இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அரியானா, ஜார்க்கண்ட், மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது சோனியா காந்தி பேசியதாவது,
பொதுமக்களின் மனநிலை கட்சிக்கு சாதகமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாம் மேற்கொண்ட பிரசாரம் காரணமாக கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகி இருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். நாம் மனநிறைவு மனநிலைக்கோ, அதிகப்படியான தன்னம்பிக்கைக்கோ சென்றுவிடக்கூடாது. மக்களவைத் தேர்தலில் வெளிப்பட்ட சாதகமான சூழலை கருத்தில் கொண்டு நாம் சிறப்பாக செயல்பட்டால், தேசிய அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் மத்திய பட்ஜெட்டைப் பற்றி சாதகமாக பேசினாலும், ஏமாற்றம் பரவலாக உள்ளது.
கன்வார் யாத்திரை பாதையில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர் அடங்கிய பலகையை பலரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்ற உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் உத்தரவை நல்லவேளையாக சுப்ரீம் கோர்ட்டு சரியான நேரத்தில் தலையிட்டு தடுத்துவிட்டது. ஆனால் இது ஒரு தற்காலிக ஓய்வு மட்டுமே.
ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்கலாம் என எப்படி விதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று அழைத்துக் கொள்கிறது. ஆனால், அது பா.ஜ.க.வின் அரசியல் மற்றும் சித்தாந்தத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அமைப்பு என்பதை உலகம் அறியும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. சாதிவாரியாக மக்கள்தொகை விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்வதை இது தடுக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான அளவில் வாக்குகள் குறைந்துள்ளன. இருந்தும், அக்கட்சி எந்தப் பாடத்தையும் கற்கவில்லை. சமூகங்களை தொடர்ந்து அது பிளவுபடுத்தி வருகிறது" என தெரிவித்தார்.