கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உறுதி; விவசாயிகள் போராட்டம் வாபஸ்
|கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்ததை அடுத்து, நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
மராட்டியத்தில் வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் பேரணி
சமீபத்தில் மாநிலத்தில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. வரத்து அதிகமாக இருந்ததால் வெங்காயம் விலை சரிந்ததாக வியாபாரிகள் கூறினர். விவசாயி ஒருவர் 500 கிலோ வெங்காயத்தை ரூ.2-க்கு விற்பனை செய்த அவலமும் அரங்கேறியது. இதையடுத்து விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குவிண்டால் வெங்காயத்துக்கு ரூ.300 இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
இந்தநிலையில் நாசிக் மாவட்டம் தின்தோரியில் இருந்து விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.600 இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு 12 மணி நேரம் தடையின்றி மின்சாரம் வினியோகிக்க வேண்டும், பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12-ந் தேதி மும்பை நோக்கி விவசாயிகள், பழங்குடியின மக்கள் பேரணியை தொடங்கினர்.
பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். ஒரு வாரமாக மும்பை நோக்கி நடைபயணத்தை தொடங்கிய விவசாயிகள் நேற்று முன்தினம் தானே வந்தடைந்தனர். அவர்கள் மும்பை வந்து ஆசாத் மைதானத்தில் பிரமாண்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்து இருந்தனர்.
ஷிண்டே உறுதி
இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.350 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். வனஉரிமை, வனநில ஆக்கிரமிப்பு, கோவில் அறக்கட்டளை நிலம் பரிமாற்றம், விவசாயிகள் மேய்ச்சல் மைதானம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விவசாய சங்க பிரநிதிகளிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
போராட்டம் வாபஸ்
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் உறுதி மொழியை ஏற்று நேற்று விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் தானேயில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதுதொடர்பாக பேரணிக்கு ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி எம்.எல்.ஏ. வினோத் நிகோலே கூறியதாவது:-
''எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. எங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர்கள், தாசில்தார்களுக்கு அரசு சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வேலைகளை அரசு தொடங்கிவிட்டது தொடர்பாக எங்களுக்கு தகவல்களும் வந்து உள்ளது. எனவே போராட்டத்தை கைவிட முடிவு செய்தோம்.''
இவ்வாறு அவர் கூறிம்னார்.