வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம் முதலிடம் - தேவேந்திர பட்னாவிஸ்
|வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மராட்டியம் முதலிடம்
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டு முதலீட்டை பெறும் வகையில் ஜப்பான் நாட்டுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு நிறுவன உரிமையாளர்களை சந்தித்து பேசினார். இந்தநிலையில் அவர் நடப்பாண்டின் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டை பெறுவதில் மராட்டியம் முதலிடம் பிடித்து உள்ளதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ.36 ஆயிரத்து 634 கோடி
கடந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 422 கோடி முதலீட்டை பெற்று மராட்டியம் முதல் இடம் பிடித்தது. நடப்பாண்டிலும் (2023-24) முதல் காலாண்டில் மராட்டியம் ரூ.36 ஆயிரத்து 634 கோடி வெளிநாடு முதலீட்டை ஈர்த்து முதல் இடத்தை பிடித்து உள்ளது.
மராட்டியத்துக்கு கிடைத்த வெளிநாட்டு முதலீடு முறையே 2,3,4-வது இடங்களை பிடித்த டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு கிடைத்ததை விட மிகவும் அதிகம். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் மாநிலம் வேகமாக முன்னேறி வருகிறது. மராட்டியம் முதலீட்டாளர்களுக்கு பிடித்த மாநிலமாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.