< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

தினத்தந்தி
|
23 July 2023 3:03 AM IST

கனமழை காரணமாக மராட்டியத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மராட்டியத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஆறுகளில் வெள்ளபெருக்கு

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யவத்மால் மாவட்டத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பான் கங்கா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் யவத்மால் மாவட்டம் மகாகாவ் கிராமத்தில் உள்ள ஆனந்த்நகர் கிராமத்தில் மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் உயரமான இடங்களிலும், வீடுகளில் மேற்கூரைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மீட்பு பணி

அங்கிருந்து வெளியேற முடியாமல் 110-க்கும் மேற்பட்டோர் தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்டு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராணுவத்துக்கு சொந்தமான எம்.ஐ.-17 வி.5 என்ற 2 ஹெலிகாப்டர்கள் இந்த மீட்பு பணியில் இறங்கியது. இதற்காக ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். மாநில பேரிடர் மீட்பு படையினர், விமான படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் மகாகாவ் கிராமத்தில் சிக்கி இருந்த 110-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டதாக மாவட்ட கலெக்டர் அமோல் யெட்ஜ் தெரிவித்து உள்ளார்.

23 செ.மீ. மழை

பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் யவத்மால் மாவட்டம் மகாகாவ் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மட்டும் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. யவத்மால் மாவட்டத்தில் சராசரியாக 11.75 செ.மீ. மழை பெய்தது. மழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதகுகள் திறப்பு

இதேபோல் புல்தானா மாவட்டம் சங்ராம்பூர் தாலுகாவில் உள்ள சாகர்கான் கிராமத்தில் வெள்ளத்தால் வெளியேற முடியாமல் சிக்கி தவித்த சுமார் 140 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மழையால் அமராவதி அணை நிரம்பி மதகுகள் திறக்கப்பட்டதையடுத்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடப்பட்டது. இதேபோல் ஜல்காவ், கோலாப்பூர் போன்ற மாவட்டங்களும் கனமழையின் கோர தாண்டவத்தால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை

புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள மிகவும் பிரபலமான புஷி அணை நிரம்பியது. மழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பால்கர், தானே, ராய்காட், ரத்னகிரி, மற்றும் சந்துதுர்க் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல தலைநகர் மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்