மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் வாகனங்கள் மீது கல்வீச்சு
|மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
பெங்களூரு,
மராட்டிய - கர்நாடக எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அதாவது கர்நாடத்தில் உள்ள பெலகாவியை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் எல்லை பிரச்சினை தொடர்பாக பெலகாவி சென்று மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச உள்ளதாக மராட்டிய மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்கு கர்நாடக அரசு கண்டனம் தெரிவித்தது. மராட்டிய மந்திரிகள் கர்நாடகம் வந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
மராட்டிய மந்திரிகளின் பயணம் நிர்ணயிக்கப்பட்ட நாளான நேற்று பெலகாவியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் மராட்டிய மந்திரிகள் பெலகாவி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பு பெலகாவியில் நேற்று போராட்டம் நடத்தியது. அவர்கள் மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அந்த லாரிகளில் மராத்தி மொழி வாசகங்களை கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் அந்த லாரிகளின் சக்கரத்தில் இருந்து காற்றை பிடுங்கிவிட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மராட்டியத்திலும், கர்நாடக பஸ்களுக்கு கருப்பு மை பூசும் சம்பவங்கள் நடந்தன. புனேயில் உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் கர்நாடக அரசு பஸ்களில் கருப்பு மை பூசினர்.
இந்த பரபரப்பான சூழலில் மராட்டிய மந்திரிகளின் பெலகாவி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.