< Back
தேசிய செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
தேசிய செய்திகள்

தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

தினத்தந்தி
|
24 July 2022 3:02 AM IST

தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கை மாநில அரசு சி.பி.ஐ.க்கு மாற்றி உள்ளது.

போன் ஒட்டு கேட்பு வழக்கு

சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது, போலீஸ் துறையில் பணியிடமாற்றத்தில் நடந்த ஊழல் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா, அப்போதைய டி.ஜி.பி.க்கு எழுதிய கடிதத்தை தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். அதில் பல போன் உரையாடல்களும் இடம்பெற்று இருந்தன.

இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களின் போன் உரையாடல் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே விசாரணை நடத்தினார். இதில் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா அரசின் ரகசியங்களை வெயிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல அவர் 2019-ல் மாநில உளவுப்பிரிவு தலைவராக இருந்த போது அனுமதியின்றி அரசியல் தலைவர்களின் போன் உரையாடல்களை ஒட்டு கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பி.கே.சி. சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக ராஷ்மி சுக்லா, தேவேந்திர பட்னாவிசிடம் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தது.

சி.பி.ஐ.க்கு மாற்றம்

சமீபத்தில் இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக கொலபா போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் புதிதாக அமைந்து உள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டு கேட்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உள்ளது.

இதேபோல ஜல்காவ் மாவட்டத்தில் கல்வி நிறுவன அதிகாரிகளை மிரட்டியதாக பா.ஜனதா தலைவர் கிரிஷ் மகாஜன் மற்றும் 28 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2 வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை" என்றார்.

மேலும் செய்திகள்