< Back
தேசிய செய்திகள்
ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிப்பு
தேசிய செய்திகள்

ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிப்பு

தினத்தந்தி
|
27 Jun 2022 2:25 PM IST

ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

தேர்தலில் பா.ஜனதா 106 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனினும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலில் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உடைந்தது.

இதையடுத்து சிவசேனா, கொள்கைகள் முரண்பாடான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

இந்தநிலையில் சமீபத்தில் மராட்டியத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி., 10 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சுயேச்சை ஆதரவுடன் 3 எம்.பி., 5 எம்.எல்.சி. இடங்களை கைப்பற்றி மாயாஜாலம் செய்து இருந்தது.

இதில் கடந்த 20-ந் தேதி எம்.எல்.சி. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலர் மாயமானார்கள். பின்னர் அவர்கள் சூரத்தில் உள்ள ஓட்டலில் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் சிவசேனா, மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் சோ்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் சூரத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஓட்டலுக்கு மாறினர். இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்காரணமாக ஆளும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரது அரசு பங்களா வர்ஷாவை காலி செய்துவிட்டு மாதோஸ்ரீ இல்லம் திரும்பினார். அதே நேரத்தில் அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடங்கினார். குறிப்பாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதேபோல ஏக்நாத் ஷிண்டே கட்சி சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய கூடாது என விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டன. எனவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு திரும்ப பெற்று விட்டதாக ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை உள்துறை மந்திரி திலீப்வால்சே பாட்டீல் மறுத்தார்.

இந்தநிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேருக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி போலீஸ் டி.ஜி.பி., மும்பை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது. 8 பேரும் வகித்து வந்த மந்திரி பதவியை வேறு எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கினார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே.

இதனிடையே 38 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப்பெற்றதால் மராட்டிய அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடாதது ஏன்? என ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்