மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கம் எப்போது? ஏக்நாத் ஷிண்டே தரப்பு தகவல்
|ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என ஏக்நாத் ஷிண்டே அணியினர் தெரிவித்து உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி சிவசேனாவை சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக 40 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். தற்போது அவர்கள் மட்டுமே மந்திரி சபையில் உள்ளனர். புதிய மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை. இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு மாநிலத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறுகையில், " மந்திரி சபையை விரிவாக்கம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக முக்கியமாக கூட்டம் 13-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில் எங்கள் தரப்பு பிரதிநிதி கலந்து கொள்வார். எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வேலைகளில் உள்ளனர். பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளை செய்ய யாருக்கு நேரம் இருக்கிறது?. மந்திரி சபை விரிவாக்கத்திற்கு அவசரம் இல்லை. " என்றார். இதேபோல மந்திரி சபை விரிவாக்க விழாவில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.