< Back
தேசிய செய்திகள்
உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களுக்கு சிவசேனா கொறடா திடீர் உத்தரவு; சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் நடவடிக்கை
தேசிய செய்திகள்

உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களுக்கு சிவசேனா கொறடா திடீர் உத்தரவு; சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் நடவடிக்கை

தினத்தந்தி
|
28 Feb 2023 4:45 AM IST

கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், உத்தவ் தாக்கரே அணி உள்பட சிவசேனாவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் திடீரென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

கவர்னர் உரை

இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் மராட்டிய புதிய கவர்னராக பதவி ஏற்ற ரமேஷ் பயஸ் சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அவரை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மராட்டிய சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர், மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே, துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் மற்றும் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

கவர்னர் ரமேஷ் பயஸ் சட்டசபை கூட்டு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலைவாய்ப்புகள்

மராட்டிய அரசு 2022-23-ம் நிதியாண்டில் மட்டும் 600 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க 45 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ரூ.87 ஆயிரத்து 774 கோடி முதலீட்டை ஈர்க்க 24 திட்டங்களை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்மூலம் 61 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும். கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் மாநில அரசு 19 நிறுவனங்களுடன் ரூ.1.37 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.

தியாகிகள் ஓய்வூதியம்

பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 85 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் 2 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு அரசு வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் துணைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி இரட்டிப்பாக வழங்கியுள்ளது.

இவ்வாறு கவர்னர் தனது உரையில் பேசினார்.

கொறடா திடீர் உத்தரவு

இதற்கிடையே முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு முதல் தடவையாக கூடியுள்ள சட்டசபை கூட்டம் என்பதால், இதில் பல்வேறு பரபரப்புகள் தொற்றிக்கொண்டது. அதற்கு தகுந்தாற்போல் சிவசேனா திடீர் நடவடிக்கையாக தனது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் (உத்தவ் தாக்கரே அணி உள்பட) கொறடா உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கட்சி கொறடா பாரத் கோகவாலே பிறப்பித்துள்ள உத்தரவில், "சட்டசபை கூட்டத் தொடர் முழுமைக்கும் கலந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்" என்று கூறப்பட்டுள்ளது. இது உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் சொன்னது என்ன?

கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையின் போது, உத்தவ் தாக்கரே தரப்பு வக்கீல் சிங்கி கூறுகையில், "நாளையே அவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம் அல்லது நோட்டீசு அனுப்பலாம். எங்களுக்கு கோர்ட்டு தான் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் ஆணைய முடிவை எதிர்க்கும் வழக்கு 2 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

உடனே நீதிபதிகள், வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில் கொறடா உத்தரவு அல்லது தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்டனர். அதற்கு "இல்லை, இல்லை.." என்று ஷிண்டே தரப்பு வக்கீல் கவுன் கூறியிருந்தார். தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்திருந்தார்.

கொறடா விளக்கம்

இதுபற்றி சிவசேனா கொறடா பாரத் கோகவாலேயிடம் கேட்டபோது, "அவர்களுக்கு (உத்தவ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள்) சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய நிவாரணம் 2 வாரங்கள் தான். சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முழு நேரமும் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக அல்ல. சட்டசபைக்கு யார்-யார்? வருகிறார்கள், யார்-யார்? வருவதில்லை என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்" என்றார். ஆனால் சிவசேனா கொறடா உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது என்று உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சுனில் பிரபு எம்.எல்.ஏ. கூறினார்.

இதுபற்றி மராட்டிய அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீஹரி அனே கூறுகையில், "சிவசேனாவின் பிளவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எனவே சிவசேனாவின் கொறடா உத்தரவு, உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது" என்றார்.

சபாநாயகர் தகவல்

அதேவேளையில் சட்டசபையை பொறுத்தவரை ஒரே ஒரு சிவசேனா தான் உள்ளது, உத்தவ் தாக்கரே தரப்பு தங்களை தனி அணியாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறினார்.

சிவசேனாவின் திடீர் கொறடா உத்தரவு குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்