காவல் நிலையத்தில் மோதல்.. சிவசேனா பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு: பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது
|ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம், மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தானே:
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், கல்யாண் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவருக்கும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.
இதுதொடர்பாக, உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டின் மகன் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது எதிர்தரப்பில் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் வந்துள்ளனர். தகவல் அறிந்த் எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டும் அங்கு விரைந்தார்.
காவல் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டரின் அறையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கைகலப்பு ஏற்பட, எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை நோக்கி சுட்டார். இதில் மகேஷ் கெய்க்வாட், அவரது உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிsசூடு நடத்திய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம், மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி எம்.எல்.ஏ. கூறுகையில், 'என் கண் முன்னால் என் மகன் தாக்கப்படுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் துப்பாக்கியால் சுட்டேன்' என்றார்.
மேலும், 'மராட்டியத்தில் குற்றவாளிகளின் சாம்ராஜ்ஜியத்தை முதல்-மந்திரி ஷிண்டே உருவாக்கி வருகிறார். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தால் மாநிலத்தில் குற்றவாளிகள்தான் தோன்றுவார்கள். என்னைப் போன்ற ஒரு நல்லவனை இன்று குற்றவாளியாக்கி விட்டார்' என்றும் அவர் கூறினார்.