மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
|நள்ளிரவில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் போட்ட போது பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.
மும்பை,
சார்ஜ் போடும் போது பேட்டரி வெடிப்பது, திடீரென வாகனம் தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் மும்பை புறநகர் பகுதியான பல்கார் மாவட்டம் வசை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் சர்பாஸ் அன்சாரி. இவரது மகன் சபீர் ஷாநவாஷ் அன்சாரி (வயது7). சம்பவத்தன்று இரவு சபீர் அன்சாரி, பாட்டியுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தான்.
இந்தநிலையில் அதிகாலை 2.30 மணியளவில் சர்பாஸ் அன்சாரி அவரது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை எடுத்து சிறுவன் சபீர் அன்சாரி தூங்கிய அறையில் சார்ஜ் போட்டார்.
அதிகாலை 5.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியது. பேட்டரி வெடித்ததில் சிறுவன் சபீர் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களும் உடைந்தன. சிறுவனுடன் தூங்கிக்கொண்டு இருந்த அவரது பாட்டி லேசான காயங்களுடன் தப்பினார்.
80 சதவீத தீக்காயம் அடைந்த சிறுவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் சிறுவன் சபீர் அன்சாரி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
அதேநேரத்தில் ஸ்கூட்டர் பேட்டரி ஓவர்ஹீட் ஆகி வெடிக்கவில்லை, பேட்டரியை 3 முதல் 4 மணி நேரம் வரை சார்ஜ் போட வேண்டும் என விற்பனையாளர்கள் கூறியதாக சர்பாஸ் அன்சாரி தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "ஜெய்பூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் வெடித்த பேட்டரியை ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் இரவு தூங்கும் நேரத்தில் பேட்டரி மற்றும் செல்போன்களை சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும்.
இதேபோல எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகள் திறந்த பகுதியில், மனிதர்கள் கண்காணிப்பில் சார்ஜ் போடப்பட வேண்டும்" என கூறினர்.