< Back
தேசிய செய்திகள்
சமாதானப்படுத்த முயன்ற பெண் போலீசை தாக்கி விட்டு தப்பிச்சென்ற 2 பெண்கள்
தேசிய செய்திகள்

சமாதானப்படுத்த முயன்ற பெண் போலீசை தாக்கி விட்டு தப்பிச்சென்ற 2 பெண்கள்

தினத்தந்தி
|
16 Aug 2023 2:44 PM IST

மராட்டியத்தில் கணவன்-மனைவி சண்டையை தடுக்க முயன்ற பெண் போலீசை தாக்கி விட்டு 2 பெண்கள் தப்பிச்சென்றனர்.

தானே,

மராட்டிய மாநிலத்தின் தானே நகரில் ஷில்-டைகர் காவல் நிலையம் உள்ளது. அங்கு வழக்கம்போல் நேற்று 28 வயது பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது கணவர் மீது புகார் அளிக்க ஒரு பெண் வந்தார். அவருடன் 2 ஆண்களும் வந்தனர்.

இவர்கள் வந்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் கணவரும், 2 பெண்களுடன் காவல் நிலையத்தினுள் நுழைந்தார். பின்னர் இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது கைகலப்பாக மாறியது. குறிப்பாக அந்த பெண்ணை, அவரின் கணவருடன் வந்த 2 பெண்கள் சரமாரியாக தாக்கினர்.

இந்த சண்டையை, பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் தடுக்க முயன்றார். ஆனால் அந்த 2 பெண்கள் செவி சாய்க்கவில்லை. மாறாக போலீசாரையும் திட்டத் தொடங்கினர். இருப்பினும் அந்த பெண் போலீஸ், அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். திடீரென அவர்கள், அந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் அவர் நிலை தடுமாறி விழுந்தார்.

உடனடியாக அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஷில்-டைகர் காவல் நிலைய போலீசார், பெண் கான்ஸ்டபிளைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய பெண்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்