1½ லட்சம் அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்திய மகாதேவ் உடல் நலக்குறைவால் மரணம்
|பெங்களூருவில் 1½ லட்சம் அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்தி சமூக சேவை ஆற்றிய மகாதேவ், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் கெம்பேகவுடா விருது பெற்றவர் ஆவார்.
பெங்களூரு:
அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு
பெங்களூரு ராஜராஜேசுவரிநகா் பகுதியில் வசித்து வந்தவர் மகாதேவ்(வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பெங்களூருவில் அனாதையாக உயிர் இழப்போரின் உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்தி, அவர்களது உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்யும் வேலையில் மகாதேவ் ஈடுபட்டு வந்தார். விக்டோரியா ஆஸ்பத்திரியிலேயே எந்த நேரமும் தங்கி இருப்பார்.
மகாதேவ் மரணம்
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மகாதேவ் அவதிப்பட்டு வந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாதேவ் மரணம் அடைந்து விட்டார். தனது 9 வயதில் இருந்தே அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்தி அடக்கம் செய்து வந்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இந்த சேவையை அவர் மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் விக்டோரியா ஆஸ்பத்திரியில் இருந்து அனாதை உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல அவர் மிகவும் அவதிப்பட்டார்.
இதுபற்றி அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மதன் கோபால், ஆஸ்பத்திரியில் இருந்து மயானத்திற்கு உடல்களை கொண்டு செல்வதற்காக மகாதேவுக்கு ஒரு சரக்கு ஆட்டோவை வழங்கி இருந்தார். அந்த ஆட்டோவிலேயே அனாதை உடல்களை மயானத்திற்கு மகாதேவ் கொண்டு செல்வார். ராஜராஜேசுவரிநகர் பகுதியில் அவருக்கு வீடு இருந்தாலும், விக்டோரியா ஆஸ்பத்திரி தான் சொந்த வீடு போல மகாதேவுக்கு இருந்தது.
1½ லட்சம் அனாதை உடல்கள்
மகாதேவ் இதுவரை பெங்களூருவில் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்தி உள்ளார். மகாதேவின் சேவையை பாராட்டி கர்நாடக அரசு அவருக்கு கெம்பேகவுடா விருது வழங்கி கவுரவித்திருந்தது. முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இருந்து முதல்-மந்திரி பதக்கத்தையும் மகாதேவ் பெற்றிருந்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட மகாதேவின் சேவையை பாராட்டி இருந்தார்.
மகாதேவ் விட்டு சென்றுள்ள அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்தும் பணிகளை, அவரது மகன்கள் கிரண் மற்றும் பிரவீன் தொடர்ந்து செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.