ராஜஸ்தானில் உள்ள காதலர்களுடன் சேர வீட்டை விட்டு வெளியேறிய மராட்டிய பள்ளி மாணவிகள் - குஜராத்தில் மீட்பு
|மராட்டியத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு பள்ளி மாணவிகளை போலீசார் குஜராத்தில் மீட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டம் நல சொபரா பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு பள்ளி மாணவிகள் 3 பேர் கடந்த 14-ம் தேதி தங்கள் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளனர். பல இடங்களில் தேடியும் மாணவிகள் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமிகள் குஜராத் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குஜராத் மாநிலம் வாபி நகரில் இருந்த 2 மாணவிகளையும், சூரத் நகரில் இருந்து ஒரு மாணவியையும் மீட்ட போலீசார் அவர்களை பல்ஹர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அந்த மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் வீட்டை விட்டு வெளியேறியதற்கான திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது.
மாணவிகளில் 2 பேர் ராஜஸ்தானை சேர்ந்த 2 இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். சமூகவலைதளம் மூலம் இந்த காதல் மலர்ந்துள்ளது. தங்கள் காதலர்களுடன் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு 2 மாணவிகளும் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். காதலர்களுடன் சேர விரும்பிய 2 மாணவிகளுக்கு உதவி மற்றொரு மாணவி அவர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மராட்டியத்தில் உள்ள வீட்டில் இருந்து மாணவிகள் 3 பேரும் ரெயில் மூலம் குஜராத் சென்றுள்ளனர். அங்கிருந்து ராஜஸ்தான் செல்ல மாணவிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, மராட்டியத்தில் உள்ள சொந்த ஊர் அழைத்த வரப்பட்ட மாணவிகளில் ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். எஞ்சிய 2 மாணவிகளும் மீட்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.