மரட்டியத்தில் சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதா? அஜித்பவார் கண்டனம்
|சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு மந்திரி பதவி வழங்கியதற்கு அஜித்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றார். எனினும் அவர் பதவி ஏற்று 40 நாட்களுக்கு பிறகு தான் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. பா.ஜனதா, ஷிண்டே அணியை சேர்ந்த தலா 9 பேர் மந்திரியாக பதவி ஏற்றனர். இதில் இளம்பெண் தற்கொலை சம்பவம் சர்ச்சையில் சிக்கி கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் மந்திரி பதவியை இழந்த சஞ்சய் ரதோட், ஊழல் வழக்கில் சிக்கிய விஜய்குமார் காவித் உள்ளிட்டவர்களுக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " கறைபடிந்த பலரும் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் இந்த முடிவை விரும்பவில்லை. ஷிண்டே - பட்னாவிஸ் அரசில் உள்ள சிலருக்கே கறைபடிந்தவர்களை மந்திரி சபையில் சேர்ப்பதில் விருப்பம் இல்லை. ருபி வங்கி போல புனேயில் 5 முதல் 7 வங்கிககள் உள்ளன. பழம்பெரும் கூட்டுறவு வங்கியாளர் வித்யாதர் அனாஸ்கரிடம் பரிந்துரை கேட்டுள்ளோம். மராட்டியத்தில் உள்ள வங்கிகள் சிக்கலை சந்திக்க கூடாது. மகாவிகாஸ் அகாடி குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியா காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரேவிடம் தான் உள்ளது. " என்றார்.