< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்:  அரசு தேர்வு எழுதிய பாடங்களின் பெயர் கூட தெரியாமல் டாப் 3 இடம்; புதிய சர்ச்சை

Courtesy:  Indiatoday

தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: அரசு தேர்வு எழுதிய பாடங்களின் பெயர் கூட தெரியாமல் டாப் 3 இடம்; புதிய சர்ச்சை

தினத்தந்தி
|
18 July 2023 8:53 PM IST

மத்திய பிரதேசத்தில் தேர்வு எழுதிய பாடங்களின் பெயர் கூட தெரியாமல் அதிக மதிப்பெண்களை பெற்று முன்னணி இடம் பிடித்ததில் முறைகேடு நடந்து உள்ளது என புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் வருவாய் துறை பணியாளர்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த ஏப்ரல் 26-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 9.8 லட்சம் பேர் எழுதி உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு முடிவுகள் மே மற்றும் ஜூன் மாதத்தில் வெளிவந்தன.

எனினும், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதில் டாப் 10 இடம் பிடித்தவர்களில் 7 பேர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் நடத்தப்படும் கல்லூரியில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வை எழுதி உள்ளனர். இதில் பூனம் ரஜாவத் என்ற பெண் 3-வது இடம் பிடித்து உள்ளார்.

ஆனால், அவர் தேர்வுடன் தொடர்புடைய கேள்விகளுக்கோ அல்லது தேர்வுக்கான எட்டு பாடங்களின் பெயர்களையோ கூட சரியாக கூறமுடியவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வந்தேன் என கூறிய அவர், ஆன்லைன் வழியே பயிற்சி பெற்றேன். பின்னர், சில நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு படித்தேன் என கூறியுள்ளார்.

அவர், கடினம் வாய்ந்த கேள்விகளுக்கு சரியான பதிலையும், அடிப்படை கேள்விகளுக்கு தவறாகவும் பதிலளித்து உள்ளார்.

சில கேள்விகளில் அனைத்து பதில்களும் தவறாக இருந்து உள்ளது என கூறப்படுகிறது. இது பற்றி ஏன்? கேள்வி எழுப்பவில்லை என்று கேட்டதற்கு, அது தேர்வு அதிகாரிகளை சார்ந்தது. அதுபற்றி நான் எதுவும் கூற முடியாது என கூறியுள்ளார்.

நான் மிக வசதி குறைவான குடும்பத்தில் இருந்து வந்தவள். சமூக ஊடங்களை கூட அதிகம் நாங்கள் பயன்படுத்துவதில்லை. அதனால், நான் கேள்வி எதுவும் எழுப்பவில்லை என்று பூனம் கூறியுள்ளார்.

வங்கி தேர்வு மற்றும் எஸ்.எஸ்.சி. எம்.டி.எஸ். தேர்வு உள்பட பிற தேர்வுகளையும் எழுதியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

நான் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளேன். அதனால், என்னால் எந்த பதிலையும் அளிக்க முடியாது என கூறிய அவர், தேர்வில் முறைகேடு நடந்து இருக்குமென்றால், அதுபற்றி விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்