< Back
தேசிய செய்திகள்
பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி!
தேசிய செய்திகள்

பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி!

தினத்தந்தி
|
29 May 2022 10:55 AM GMT

பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மன்டலா மாவட்டத்தில் சிங்கார்பூர் என்ற பகுதி உள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு, நேற்று பானி பூரி திருவிழா நடத்தப்பட்டது. இதில் அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பானி பூரி சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், புட் பாய்சன் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மொத்தம் 97 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அவர்கள் அனைவரும் ஒரே கடையில் பானி பூரி சாப்பிட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட பானி பூரி கடைக்கு விரைந்த போலீசார் அந்த கடையில் இருந்த பொருள்களை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.அத்துடன் அந்த பானி பூரி கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளை மத்திய மந்திரியும் அப்பகுதியின் எம்.பி.யுமான பக்கன் சிங் குலாட்சே, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக மருத்துவர் ஷாக்யா கூறுகையில், 97 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில குழந்தைகளைத் தவிர மற்றவர்களுக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். எனவே யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என்றார்.

மேலும் செய்திகள்