மத்தியபிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து
|சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இந்த தலைமைச் செயலகத்தில் அனைத்து விதமான அரசு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இன்று காலை தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் திடீரென தீ பற்றியது. அந்த தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியதால் அந்த இடமே புகையால் சூழப்பட்டது.
இந்த தீவிபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தீ விபத்து குறித்து ம.பி. முதல்-மந்திரி மோகன் யாதவ் பேசுகையில், "கலெக்டரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.