மத்திய பிரதேசம்: சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பெண் உயிரிழப்பு
|படுகாயமடைந்த மூவரும் உயர் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் பூஃப் நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் ஜோஷி என்பவரது வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரசர் ஆகியவை அடுத்தடுத்து வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின்போது வீட்டில் மனோஜ் ஜோஷியின் தாயார் கமலா தேவி, மருமகள் ரஞ்சனா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் கமலா தேவி உயிரிழந்த நிலையில், ரஞ்சனா மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் மூவரும் உயர் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டபோது பூஜை அறையில் இருந்த விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.